தென்காசியில் யானைகள் கணக்கெடுப்பு பணியின் போது வன ஊழியர்களை யானை கூட்டங்கள் விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது மே17 ம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிநாளான இன்று வனத்துறை அலுவலர்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வரும் பல்வேறு கால சூழ்நிலைகளில் இந்த கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் குற்றாலம், புளியரை, செங்கோட்டை, பண்பொழி,
சொக்கம்பட்டி, வடகரை, சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள்
கணக்கெடுக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், முதல் நாள்
கணக்கெடுப்பின் போது யானை கூட்டங்கள் வன ஊழியர்களை கணக்கெடுப்பு பணியை செய்யவிடாமல் விரட்டியுள்ளன.
இந்நிலையில் வன ஊழியர்கள் அச்சப்படாமல் யானைகள் கணக்கெடுக்கும் பணியை
தீவிரமாக நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று யானைகளின் நீர் வழித்தடங்கள் மற்றும் நீர் ஆதாரமாக விளங்கும் மலைப்பகுதியில் உள்ள குட்டைகள் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகின்றனர்.
மேலும், இன்றுடன் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது முடிவடைய உள்ள சூழலில்,
மூன்று நாட்கள் கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு பகுதிகளிலும் யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வழித்தடங்கள், அவற்றின் நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்
வழித்தடங்கள் உள்ளிட்டவைகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு அதனை அறிக்கையாக
அரசுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.







