ஈரோட்டில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டிவந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு அடுத்த சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண், தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணின் குளியல் அறையின் மேற்கூரையில் இருந்த துளை வழியாக அவர் குளிப்பதை கண்ணன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தன்னுடன் தனிமையில் இருக்க இளம்பெண்ணை வற்புறுத்திய அவர், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்ணனை கைது செய்து
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







