தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்தின்போது, அதிமுக வார்டு உறுப்பினரின் மகன் அரசு அதிகாரியின் கன்னத்தில் அரைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட ஏரிகள் மற்றும் புளியமரங்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. அப்போது, ஏலதாரர்கள் தாமதமாக வந்ததால் மதியம் 12.30 மணிக்கு ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே டெபாசிட் தொகையை செலுத்திய காரிமங்கலம் பேரூராட்சியி 6-வது வார்டு அதிமுக உறுப்பினரின் மகன் பாரதி என்பவர், ஏல தொகைக்கு வழங்கப்பட்ட வங்கி காசோலை குறித்து கேள்வி எழுப்பியதுடன், வேறு பெயருக்கு மாற்ற வேண்டுமென கோரியுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பேரூராட்சி அலுவலக தலைமை எழுத்தர் சந்தோஷ், அப்படி மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எழுத்தர் சந்தோஷ் கன்னத்தில் அதிமுக வார்டு உறுப்பினரின் மகன் பாரதி அறைந்துள்ளார்.
இதனையடுத்து, பாரதி மற்றும் சில அதிமுகவினர் இணைந்து தன்னை தாக்கியதாக கூறி எழுத்தர் சந்தோஷ் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் சந்தோஷ் தாக்கப்பட்டதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தில் அரசு அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







