கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பு சார்பில் நடைபெற்ற பேரணியின்போது வெறுப்பை விதைக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்பாக மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் ஆலப்புழா நகரில் PFI சார்பில் கடந்த 21ம் தேதி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணில் ஒரு நபரின் தோள் மீது அமர்ந்திருந்த ஒரு சிறுவன், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப, மற்றவர்கள் அதனை திருப்பிச் சொல்லி கோஷமிட்டனர்.
மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய இந்த விவகாரம் குறித்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், நாட்டில் என்ன நடந்து கொணடிருக்கிறது என கேள்வி எழுப்பியது. இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பேரணியில் தோளில் தூக்கிவைத்திருந்த நபர் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









