ஜினெடின் ஜிடேன் – மக்களின் மனம் கவர்ந்த பிரான்ஸ் கால்பந்து நாயகன்

அசாத்திய திறமையால் தனது தாய்நாட்டை, உலகக் கோப்பையை தொட்டு ருசிபார்க்க வைத்த பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜினெடின் ஜிடேன் பற்றி விரிவாகக் காணலாம். 1998ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி. அசுர பலத்துடன் இருந்த நடப்பு…

அசாத்திய திறமையால் தனது தாய்நாட்டை, உலகக் கோப்பையை தொட்டு ருசிபார்க்க வைத்த பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜினெடின் ஜிடேன் பற்றி விரிவாகக் காணலாம்.

1998ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி. அசுர பலத்துடன் இருந்த நடப்பு சாம்பியன் பிரேசிலை 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் எளிதில் வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி. பாரிஸில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் திரண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், இறுதிப்போட்டியில் ஜொலித்த நாயகனின் பெயரை இடியென முழங்கினர். பெரும் புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரரான அவர் தான் ஜினெடின் ஜிடேன்(zinedine zidane).

உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜிடேன், தனது அசாத்திய Technique மற்றும் தலைமைப் பண்பால் புகழ்பெற்றிருந்தார். கண நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறனும் அவரிடம் இருந்தது. ஜிடேனின் இந்த தனித்தன்மையே பிரேசிலின் கனவை தகர்த்தது. இறுதிப்போட்டியில், 2 கோல்கள் அடித்து பிரான்ஸுக்கு மகுடம் சூட உதவிய ஜிடேன் அன்றைய ஆண்டின் சிறந்த வீரருக்கான பலோன் டோர் விருதால் அலங்கரிக்கப்பட்டார். அந்த ஒரு போட்டி அவரை தேசத்தின் நாயகனாக மாற்றியது.

2004ம் ஆண்டு யூரோ கோப்பையில் பிரான்ஸ் அணி கிரீஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஜிடேன், உடனடியாக ஓய்வை அறிவித்து கால்பந்து உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஜிடேனின் ஓய்வுக்குப் பிறகு பிரான்ஸ் அணி தடுமாற்றம் கண்டது. லில்லியன் துராம், மெக்கெலெலே போன்ற வீரர்களும் ஓய்வு பெற்றதால், அடுத்த உலகக்கோப்பைக்கு பிரான்ஸ் அணி தகுதிபெறுமா என்பதே கேள்வியாக இருந்தது. அப்போது பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ரேமண்ட் டாமினிக், ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு அணிக்கு திரும்புமாறு ஜிடேனை கேட்டுக்கொண்டார்.

தனது தேவையை உணர்ந்த ஜிடேன், மீண்டும் அணிக்கு திரும்பினார். அவரை கேப்டன் பொறுப்பு கொடுத்து வரவேற்றார் டாமினிக். ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பையில் புது உத்வேகத்துடன் விளையாடினார் ஜிடேன். அணியை மீண்டும் ஒரு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்றார்.

இத்தாலிக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் ஜிடேன். அடுத்த சில நிமிடங்களில் இத்தாலி வீரர் மட்டெரெட்சி கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு கட்டத்தில் மட்டெரட்சிக்கும் ஜிடேனுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடிக்க, ஆவேசமடைந்த ஜிடேன், மட்டெரட்சியை திடீரென தனது தலையால் முட்டி கீழே தள்ளினார். அதோடு ஆட்டத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்சை விழ்த்திய இத்தாலி, கோப்பையை தனதாக்கியது. ஜிடேனின் கால்பந்து பயணமும் கருப்புப் பக்கத்துடன் முடிவடைந்தது. இருப்பினும் அந்த உலக்கோப்பையின் சிறந்த வீராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜிடேன். பிரான்ஸ் சென்ற அவரை வரவேற்க பாரிஸில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். வீதியெங்கும் ஜிடேனின் பெயர் ஒலித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.