16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.
தென்மாநிலங்கள் தொடங்கி வட மாநிலங்கள் வரையிலும், “ஓ” என்று ஓங்கி ஒலித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் தான் காந்தாரா. விமர்சனம், வசூல் என பல்வேறு வகையில் வரவேற்பை பெற்று வரும் காந்தாரா, தற்போது உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கன்னட சினிமாவின் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம், இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. அன்று முதலே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. மலை வாழ் மக்களான பழங்குடியினர்களின் வாழ்க்கையையும், கொண்டாட்டத்தையும், அவர்களது நாட்டார் தெய்வ வழிபாட்டையும் பிரதிபலித்த காந்தாரா, நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிலக்கிழார்களின் சாதிய ஒடுக்குமுறைக்கு பழங்குடியினர் ஆளாவதும், அவர்களது தேவைக்காக ஏமாற்றப்படுவதும், பலியாவதும் என ஒடுக்கப்பட்டோரின் வலியையும், போராட்டத்தையும் ஆணித்தரமாக பதிவு செய்தது.
ஆரம்பத்தில் கன்னட மொழியில் வெளியான காந்தாராவிற்கு கர்நாடகாவில் மட்டுமல்லாது, தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழு, தமிழ் உட்பட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டது. இதன் மூலம் மேலும் அதிகப்படியான வசூலை ஈட்டத்தொடங்கிய காந்தாரா, சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது. திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் காந்தாராவில் நடித்த நடிகர்களையும், படக்குழுவினரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியதோடு, இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்தும் பாராட்டினார்.
50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா, தற்போது உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. 16 கோடி என்ற சிறிய பட்ஜெட்டில் உருவான காந்தாரா 400 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்துள்ளதே திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவில் அதிக வசூலை ஈட்டியதாக கூறப்பட்ட ‘கே.ஜி.எஃப்’ 2 திரைப்படத்தின் 155 கோடி ரூபாய் வசூலை கடந்து, தற்போது காந்தாரா 160 கோடி ரூபாய் வசூல் செய்து, கர்நாடகாவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக காந்தாரா இடம்பிடித்துள்ளது. கே.ஜி.எஃப் திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான் காந்தாரா திரைப்படைத்தையும் தயாரித்தது என்பதால், தயாரிப்பு நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது.







