இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், தந்தையர் தினமான இன்று தனது மகனின் பெயரை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
யுவராஜ் சிங்குக்கும் அவரது காதலி ஹசெல் கீச்சுக்கும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி 25ம் தேதி அவர்களுக்கு மகன் பிறந்தான்.
பிறந்து 4 மாதங்கள் கடந்த நிலையிலும் குழந்தையின் பெயரை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், தந்தையர் தினமான இன்று யுவராஜ் சிங் தனது மகனின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஓரியன் கீச் சிங்கை உலகிற்கு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். அம்மாவும் அப்பாவும் தங்கள் சின்னக் குழந்தையை பெரிதும் நேசிப்பதாகவும், மகிழ்ச்சிகரமான தந்தையர் தின வாழ்த்து என்றும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஹசெல் கீச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் சந்தித்துக் கொண்டதில் இருந்தே இந்த தருணத்தைத்தான் நீங்கள் கனவு கண்டு கொண்டிருந்தீர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது குழந்தைக்கு நாப்கின் மாற்றுவது முதல் பல்வேறு வேலைகளையும் அழகாக செய்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.










