விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புகளில் 20 சதவீதம் அளவில் மகளிரை நியமனம் செய்ய உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உயர்நிலைக் குழுவின் ஒப்புதலை பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற வீதம் 100 மாவட்டச் செயலாளர்களை கட்சியின் நிர்வாக வசதிக்காக நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
100 மாவட்டச் செயலாளர்களில் 20% பெண்களுக்கும் 25% இளைஞர்களுக்கும் 10% பட்டியலினத்தை சேராதவர்களுக்கும் கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல் கட்டமாக கட்சியின் பொறுப்புகளில் 20 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும் என உயர்நிலை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கணிசமான அளவில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க திருமாவளவன் முன்வந்துள்ளார். அதன்படி மாவட்ட நிர்வாகத்தில் செயலாளர்,பொருளாளர், துணை செயலாளர், செய்தித் தொடர்பாளர், செயற்குழு உறுப்பினர் ஆகிய கட்சிப் பொறுப்புகளில் 20% அளவில் மகளிரை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகளிரணி உட்பட பிற துணைநிலை அமைப்புகளில் வழக்கம்போல மகளிர் நியமிக்கப்படுவர் என்றும் கட்சியின் அமைப்பு ரீதியாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆற்றல் மிகு இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்கள் வசம் 25% பேருக்கு பதவி வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
– இரா.நம்பிராஜன்