“யூ டியூப் சேனல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன” – நீதிபதி குற்றச்சாட்டு!

யூ டியூப் சேனல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்…

யூ டியூப் சேனல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா
வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார்
வழக்கு பதிந்தனர்.

அந்த வழக்கில் சவுக்கு சங்கர் மே 7 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.  அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து,  பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.  நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது,

கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும்,  கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார்.  தனது பாதுகாப்பிற்காக மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார்.  அதற்கு பதிலளித்த நீதிபதி,
“வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே சிறைத்துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள்” என கூறினார்.

இதையும் படியுங்கள் : 2021 முதல் 2024 வரை தமிழ்நாட்டில் இத்தனை குழந்தை திருமணங்களா?… RTI மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்!

பின்னர் இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே 22 வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  நீதிமன்ற விசாரணை முடிவடைந்த்தை அடுத்து, சவுக்கு சங்கரை கோவை சிறைக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் அவரை அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில்,  சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, தனியார் யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட்  முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி குமரேஷ் பாபு கூறியதாவது :

“யூடியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன.  அதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் அளிக்க வருபவர்களை அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்” இவ்வாறு நீதிபதி குமரேஷ் பாபு தெரிவித்தார்.

மேலும்,  முன் ஜாமின் மனு மீது ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.