உசிலம்பட்டியில் தலையில் பட்டாசு வெடித்து நடனமாடிய இளைஞர்கள்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!

உசிலம்பட்டியில் நடுரோட்டில் பட்டாசை தலையில் வைத்து இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலை எதிர்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கடந்த…

உசிலம்பட்டியில் நடுரோட்டில் பட்டாசை தலையில் வைத்து இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலை எதிர்கொண்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கடந்த 7
ஆண்டுகளுக்கு முன்பு நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதைய நகராட்சி நிர்வாகமும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பட்டாசு வெடிக்க தடை உத்தரவை மட்டும் விதித்த நிர்வாகத்தினர்,
அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால் தடையை மீறி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன..

எனினும்  விழாக்கள், தலைவர்கள் வருகை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது தடையை மீறி
பட்டாசு வெடிப்பதை அனைத்து தரப்பினரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்திற்கு பட்டாசு
வெடித்தவாறு இளைஞர்கள் சிலர் இன்று ஊர்வலமாக சென்றனர்.சிலர் பட்டாசை
தலையில் தூக்கி வைத்து நடுரோட்டில் நடனமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையில் நின்றன. அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஊர்ந்து கொண்டே சென்றது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகமும், காவல்உசிதுறையும் இணைந்து நகர் பகுதியில் பட்டாசு வெடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.