சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருத்தேரோட்டம்!

வைகாசி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி பதியில் திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா,…

வைகாசி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் சாமி தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி பதியில் திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை பார்க்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11-ம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும் தொடர்ந்து திருநடை திறத்தலும், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் நடந்தது. பகல் 11.30 மணிக்கு தலைமைப்பதி பள்ளி அறையில் இருந்து அய்யா, பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலுவீற்றிருக்க மதியம் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

இந்த தேரோட்டம் சுவாமிதோப்பு தலைமைபதி குரு பால ஜனாதிபதி தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் காவி உடையுடன், தலைப்பாகை அணிந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா… சிவ… சிவ… அரகரா… அரகரா… என்று பக்தி கோ‌‌ஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முத்து குடைகள் முன்செல்ல தேர், கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு அய்யாவுக்கு பக்தர்கள் தேங்காய், பழம், பூ, பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேர் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.