பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேர் கைது!

சென்னையில் பட்டா கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய இளைஞர்களை தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 19ம்…

சென்னையில் பட்டா கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய இளைஞர்களை தட்டிக்கேட்ட பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது இளைஞர்கள் சிலர், பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பட்டா கத்தியை கொண்டு பிறந்தநாள் கொண்டாடியவர்களான விஷ்வா(18) மற்றும் அவரின் நண்பர்களான கரண்(18), சக்திவேல்(18), சுரேஷ்(18), அருணாச்சலம்(20), முரளி(18) விக்கி (எ) விக்னேஷ்(18), ஐய்யனார்(18) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் கொண்டாட்டத்தின் போது தட்டிக்கேட்ட பொதுமக்களை அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 8 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பட்டாகத்தி கைப்பற்றப்பட்டு அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பட்டா கத்திகளுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது தவறான முன்னுதாரனம் என்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதோடு சட்ட ரீதியிலான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.