பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம் – அசத்தும் கோவை சிறுவன்… உதவி கோரும் பெற்றோர்!!

பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம், நூல் ஓவியம், கண்ணை கட்டிக்கொண்டு ரூபிக்ஸ் கியூபை சரி செய்தல் என அசத்தி வரும் கோவை சிறுவன் தொடர்பான செய்தி தொகுப்பை பார்க்கலாம். கோவை மணியக்காரன்பாளையம் அடுத்த…

பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம், நூல் ஓவியம், கண்ணை கட்டிக்கொண்டு ரூபிக்ஸ் கியூபை சரி செய்தல் என அசத்தி வரும் கோவை சிறுவன் தொடர்பான செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கோவை மணியக்காரன்பாளையம் அடுத்த அஞ்சுகம் நகரை சேர்ந்த மதுரை வீரன் – மல்லிகா தம்பதியின் மகன் ரவி வர்மா. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள ரவி வர்மா, பெயருக்கு ஏற்றார்போல் சிறுவயது முதலே ஓவியக்கலையில் ஆர்வம் கொண்டவர்.

கொரோனா ஊரடங்கு காலத்தை சாதகமாக்கி கொண்ட ரவி வர்மா, மினியேச்சர் எனப்படும் நுண்சிற்ப கலையை தானாக கற்றுக் கொண்டார். பென்சிலில் உள்ள நுனியில் உருவாக்கப்படும் இந்த சிறிய வகை, அதே சமயம் சவாலான நுண் சிற்பங்கள் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இதனை கற்றுக் கொண்டார் ரவி வர்மா.

அவரது தொடர் மற்றும் விடா முயற்சியின் பலனாக பென்சில் நுனியில் நுண் சிற்பங்கள், அரச மர இலையில் ஓவியம் ஆகியவற்றை யாருடைய வழிகாட்டுதலுமின்றி கற்றுகொண்டு, தற்போது பலருக்கும் செய்து கொடுத்து வருகிறார். மேலும் உலகில் சவலானாதாக கருதப்படும் நூல்கள் மூலம் உருவாகப்படும் ஓவியங்களை எளிமையாக செய்து அசத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி சதுரங்கம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வரும் ரவி வர்மா, ரூபிக்ஸ் கியூபையும், இரண்டு நிமிடத்தில் சரிசெய்து அசத்தி வருவதோடு, கண்ணை கட்டிக் கொண்டு சரிசெய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள் : ‘அரிக்கொம்பன்’ இப்போ எங்க, என்ன பண்ணுது தெரியுமா?? – புதிய அப்டேட் இதோ…!!

ஏழ்மையில் தவிக்கும் குடும்பமாக இருந்தாலும் தனது மகனுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரும் பெற்றோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பணம் இல்லாததால், தனது மகன் இரண்டு முறை வாய்ப்பை தவறவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். தங்களது மகன் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.