மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முத்துகுமாரின் மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.