பெரம்பலூர் அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சின் மகன் சின்னதம்பி வயது (25). இவர் பெரம்பலூரில் உள்ள தனது மாமா கொளஞ்சி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் கல்குவாரி குட்டையில் சின்னதம்பி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார். குளிக்க சென்ற சின்னதம்பியை காணவில்லை என அவரது உறவினர்கள் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் மாவட்ட அலுவர் அம்பிகா, உதயகுமார் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சின்னத்தம்பியின் உடல் கல்குவாரியில் இருந்து மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கல்குவாரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த திங்கள்கிழமையன்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கள ஆய்வு நடத்தியது. ஆனாலும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.








