உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 110 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4.16 சதவீதமாக, வாரத்தில் 3.72 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 13,827 பேருக்கு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. தற்போது ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பி4 மற்றும் பி 5 என உருமாற்றம் பெற்று பரவி வருகிறது. பி4 மற்றும் பி 5 வகை கொரோனா வைரசால் 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் BA.5 வகை பாதிப்பு 36.6 சதவீதமும், BA.4 வகை வைரஸ் 15.7 சதவீதமும் பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானம் டெட்ரோஸ் கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. கொரோனா மரபணு மாற்றம் அடைந்து பி4, பி5 என உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக நாடுகள் கொரோனா கட்டுப்பாடு விதிகளை விலக்கியுள்ளதால் பரவல் வேகம் அதிகமாக இருக்கும்.
உலக நாடுகள் முழுவதிலும் சுமார் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஏழை நாடுகள் தடுப்பூசி செலுத்தும் விகிதம் 13 சதவீதமாக இருக்கிறது என்றார்.








