ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக விஐபிகளுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன. பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு படைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, அன்றைய தினம் (ஏப்.22) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஈமெயில் ஒன்று வந்தது. கௌதம் கம்பீர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். ‘ஐ எஸ் ஐ எஸ் காஷ்மீர்’ என்ற பெயரில் வந்த அந்த ஈமெயில் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அடுத்து கம்பீருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்கனவே கௌதம் கம்பீர் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பர்மர் ஒரு பொறியியல் மாணவர். அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்ப்டடது.







