விபத்தில் சிக்கி வலது காலை இழந்த கன்னட இளம் நடிகர்!

ஊட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி நடிகர் சூரஜ் குமார் வலது காலை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர்…

ஊட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி நடிகர் சூரஜ் குமார் வலது காலை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸ். இவருக்கு சூரஜ் குமார் என்கிற மகன் உள்ளார். நடிகர் துருவன், மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 24 வயதான இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமாவுக்காக தனது பெயரை துருவன் என மாற்றிக்கொண்ட அவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதற்கு முன்பு ஐராவதம் மற்றும் தாரக் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்

இவர் தற்போது ரதம் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மைசூரில் இருந்து ஊட்டி செல்ல பைக்கில் கிளம்பி இருக்கிறார். அப்போது பேகுர் அருகே மைசூரு – குண்ட்லுபேட் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது முன்னே சென்ற டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நடிகர் துருவனை மீட்டு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்த துருவன் வலது காலை அகற்றினால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து அவரது வலது கால் அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் துருவன் வலது காலை இழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.