விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சதுரங்க விளையாட்டில் தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டில் இந்தியாவுக்காக புரிந்து வரும் தொடர் சாதனைகளை மையப்படுத்தி, அர்ஜூனா விருதிற்கு அவரது பெயரை, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது. 17 வயதான பிரக்ஞானந்தா, இந்தியாவில் நடைபெற்று முடிந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவுக்காக ஓபன் பிரிவின் B அணியில் போட்டியிட்டு வெண்கலமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டிகளில், உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3 முறை வீழ்தியுள்ளார் பிரக்ஞானந்தா. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த கிரிபட்டோ கோப்பை மெல்ட் வாட்டர் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடமும், கடந்த வாரம் நடந்து முடிந்த ஆசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டியில், ஓபன் பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தனது 17 வயதில் எண்ணற்ற சாதனைகளுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரராக விளங்கும் பிரக்ஞானந்தா, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் பிடே ரேட்டிங்கில் 2678 புள்ளிகளை கொண்டு, இந்திய சதுரங்க வீரர்களின் தர வரிசையில் 6 வது இடத்தில் இருந்து வருகிறார். எனவே, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, பிரக்ஞானந்தாவின் பெயரை, விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுவரை சதுரங்க விளையாட்டில் 17 பேர் அர்ஜூனா விருது பெற்றுள்ளனர். அதில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி 1961 ஆம் ஆண்டு மேனுவல் ஆரோன், 1985 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த், 2000 ஆம் ஆண்டு சுப்பராமன் விஜயலக்ஷ்மி, 2002 ஆம் ஆண்டு கிருஷ்ணன் சசிகரன் உள்ளிட்டோர் அர்ஜூனா விருது பெற்றுள்ளனர். எனவே பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது பெற்றால் தமிழ்நாட்டில் இருந்து விருதுபெரும் 5 வது வீரராவார். அதே நேரத்தில், அர்ஜுனா விருதுக்கு கோவாவை சேர்ந்த செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.