முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

10% இடஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டதே காங்கிரஸ்தான்- ஜெய்ராம் ரமேஷ்

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் ஆட்சியில்தான் அடித்தளமிடப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மேற்கொண்ட 103வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி  யூயூ லலித் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் இரண்டு நீதிபதிகள் இந்த இடஒதுக்கீடு செல்லாது என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில்  10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார். முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்திற்கு அடித்தளமிடப்பட்டதே காங்கிரஸ் ஆட்சியில்தான் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2005-2006ம் ஆண்டு காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சின்கோ ஆணையம் அமைக்கப்பட்டதுதான் இந்த சட்ட திருத்தத்திற்கு அடிகோலியதாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், அந்த ஆணையம் கடந்த 2010ம் ஆண்டு தனது அறிக்கையை தாக்கல் செய்ததாகக் கூறினார். அதன் பிறகு விரிவான ஆலோசனைக்கு பின்னர் கடந்த 2014ம் ஆண்டும் 103வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 5 ஆண்டுகள் தாமதத்திற்கு பின்னரே அதனை சட்டமாக்கியதாகவும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். தாம் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு அதுநிறைவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜெயராம் ரமேஷ், சாதிவாரியான புதிய கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தாமல் உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram