தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர் பார்டி ஃபண்ட் குறித்து அமலாக்கத்துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசியதாவது, “திமுக ஆட்சியில 7.5%-ல இருந்து 10% வரைக்கும் “பார்ட்டி ஃபண்ட்”னு சொல்லி லஞ்சமா வாங்குனதா அமலாக்கத்துறை சொல்லியிருக்கு. அடுத்த க்ளைமேக்ஸ் கேளுங்க, இதோட நேரடி பயனாளிகளாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரோட மகனும் அப்போதைய துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கவி பிரசாத், ரமேஷ், பிரபு உள்ளிட்ட பல அதிகாரிகள் இருக்கிறதாக சொல்லியிருக்கு. இன்னொரு துறை இருக்கு, அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியையும் அதிகாரத்தையும் தவறான உள்நோக்கத்தோட பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை சொல்கிறது இதுதான் திமுக.
கடந்த ஆட்சியில டாஸ்மாக்கை கையில வச்சிருந்த அமைச்சரோட சேர்ந்து, சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்த பார்ட்டி ஃபண்ட் விவகாரத்துல ஈடுபட்டிருக்காங்க. சில தனிநபர்களோட பேரும் அதுல வருது; அதுல ரத்தீஷ்னு ஒருத்தர், பல அதிகாரிகளோட டிரான்ஸ்ஃபரை முடிவு பண்ணியிருக்காரு. இவரைப் பத்தி, அதிகாரப்பூர்வ பதவி இல்லாமலேயே அதிகாரத் தரகரா செயல்படுற ஒரு முக்கிய நபர்னு ED பெருமையா சொல்லியிருக்கு. இந்த ரத்தீஷ் உத்தரவின்படிதான் அப்போ ஐஏஎஸ் அதிகாரிகளே செயல்பட்டாங்கனு சொல்லியிருக்கு; யார் இந்த ரத்தீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர்? நம்ம அரசு வந்ததும் அவரு துபாய்க்குப் போய் ஒளிஞ்சுக்கிட்டார்.
முன்னாள் அமைச்சரும் அவரது சகோதரரும் டாஸ்மாக் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சொல்கிறது. திமுக எது செஞ்சாலும் குடும்பமாகத்தான் செய்வார்கள் போல. ரெண்டு துறையோட ஃபைல்களை ஓப்பன் பண்ணதுக்கே இப்படி இருக்குனா… மத்த துறைகளோட ஃபைல்களை ஓப்பன் பண்ணா எத்தனை பூதம் கிளம்பி வருமோ தெரியல!
ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் கேட்டீங்களே போதுமா?
தப்பு செஞ்சுட்டு மாட்டிக்குறது ஒரு வகை. ஆனா, அந்த தப்புல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுட்டு, மாட்டிக்காத மாதிரி தப்பு செய்றவங்க இன்னொரு வகை. நம்ம தோழர்கள் அந்த ரெண்டாவது வகை. திமுகவினர் ஊழல்னு சொன்னாலே, டபக்குனு ஆதாரம் கொடு சொல்லி எந்திரிச்சிடுவாங்க; ஆனா, ஒண்ணு மட்டும் சொல்ல மாட்டாங்க, கவனிச்சீங்களா? இதுவரைக்கும் ஊழல் பண்ணலனு சொல்ல மாட்டாங்க; ஊழல் பண்ணினவங்கதான் ஆதாரம் கேட்பாங்க; பண்ணாதவங்க அதைக் கண்டுக்கவே மாட்டாங்க.” என்றார்.




