போதை பொருள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

போதை பொருள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை 6 மாதங்களுக்குள் ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் என்.ஐ.ஏ, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்ட வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு சட்ட வழக்குள், மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட வழக்குகள் ஆகியவற்றை தினசரி அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிப்பதற்கு ஏதுவாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களின் மாநிலத்தில் நிலுவையில் உள்ள உபா வழக்கு, என்.ஐ.ஏ வழக்கு, மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட வழக்குகள், என்.டி.பி.எஸ் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தும் தொடர்பாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த சட்டங்களின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் மதிப்பிட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி ஆஜராகி, என்.ஐ.ஏ. தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக 8 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் மொத்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு சிறப்பு நீதிமன்றம் கூட இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என குற்றச்சாட்டியதோடு, விரைவாக சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என கோரினார்.

அதற்கு தலைமை நீதிபதி, ஏன் இந்த மாநிலங்கள் இதுவரை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவில்லை? அவர்களுக்கு என்ன சிரமம் ஏற்பட்டுள்ளது ? என கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் மொத்தம் 28 என்.ஐ.ஏ வழக்குகள் நிலுவையில் உள்ளன, இவற்றை விசாரிக்க இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் தேவை, அதன்படி 2 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஒன்று செயல்பாட்டுக்கு வந்து விட்டது. மீதமிருக்கும் ஒரு சிறப்பு நீதிமன்றம் 2 வாரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என உத்தரவாதம் அளித்தார்.

அதேபோன்று கர்நாடகம், கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி விரைவில் சிறப்பு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், என்.ஐ.ஏ, உபா சட்டத்தின் அடிப்படையிலான வழக்குகளை 1 ஆண்டுக்குள்ளாக விசாரித்து முடிக்கும் வகையில் இந்த சிறப்பு நீதிமன்றங்களின் ஒரு அமர்வு முன்பு 12 வழக்குகளுக்கு மேல் விசாரணைக்கு பட்டியலிடக் கூடாது என அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இது ஒரு தீவிர பிரச்சனையாகும். எனவே, போதைப்பொருள் தடுப்புச் சட்டம் வழக்குகளை விசாரிக்க எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட்டி, போதைப்பொருள் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்க மொத்தம் 449 நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன எனவும் இதில் 179 நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவுப், முழுமையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் கால அவகாசம் தேவைப்படும் என்று தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் குற்றங்கள் ஆபத்தான வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, போதைப்பொருள் வழக்குகளை பிரத்யேகமாக கையாள நீதிமன்றங்களை மிக விரைவில் அமைப்பது அவசியமானது.

எனவே என்.டி.பி.எஸ் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை விரைவாகவும், முன்னுரிமை அடிப்படையில் 6 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும். அந்த நீதிமன்றங்களுக்கு தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்கவும், அதற்கான ஊழியர்களை நியமிக்கவும் மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.