சென்னையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்த பிரதமர், கார் மூலமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்றார். பிரதமருடன் ஒரே காரில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் வந்தார்.
பிரதமர் வாகனத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாகனங்களில் சென்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என்ற முழக்கத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களைத் தூவியும் வரவேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் கார் வழியாக ஆளுநர் மாளிகைக்கு சென்றார் பிரதமர். இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். நாளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு டெல்லி திரும்புகிறார்.
தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பிரதமர் தனது ட்விட்டரில், “எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், சென்னையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.







