பொதுஇடங்களில் மஞ்சப்பை விற்பனை செய்வதற்கான முன்மாதிரி இயந்திரம் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்’ பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல் வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய மாசு ஏற்படுத்துகிறது. ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள்தான். ஆனால் அவை மக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். இதனால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தின் முன்மாதிரி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தினால் ஒரே நேரத்தில் 40 பைகள் வரை வைத்திருக்க முடியும். இதனை பயன்படுத்த விரும்புவோர் ₹10 ரூபாயை இயந்திரத்தினுள் போட்டால், நாம் ஒரு பையைப் பெற முடியும்.
இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு கூறுகையில், இந்த இயந்திரம் நன்றாக வேலை செய்து வருவதாகவும், சந்தை இடங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் இதுபோன்ற இயந்திரங்களை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இத்திட்டத்தை செயல்படுத்த முதலில் கோயம்பேடு சந்தையில் 400 பைகளை வைத்திருக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை வைத்து சோதனை செய்ய உள்ளதாகவும், இது இன்னும் இரண்டு வாரங்களில் தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பதிவில், மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாக மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகிவிட்டது, பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகளை தயாரிப்பது சவாலாக உள்ளது. இந்த இயந்திரங்களை மக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களான சந்தை மற்றும் பேருந்து நிறுத்தங்களில் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதற்கான மாதிரி தயாராக உள்ளது. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வரும் என்றும் பதிவிட்டிருந்தார்.
மேலும் இயந்திரம் குறித்து அவர் கூறுகையில், இது ஒரு எளிய இயந்திரம், பையை எளிதாக வெளியே எடுக்க சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். “மஞ்சப்பையை தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்ய கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், TNPCB மற்றும் குழுவோடு ஒப்பந்தம் செய்து. அனைவரின் ஒத்துழைப்போடு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி பைகளை எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதே சமயம் இதனை நிரந்தர அம்சமாக மாற்றவும் விரும்பவில்லை, ஏனென்றால் மக்கள் தங்கள் சொந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார்.
நமது மாநிலத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அவர் கூறுகையில், பல காலங்களாக பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்கை ஒரே இரவில் அகற்ற முடியாது. 2019 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 170 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளால், 1,700 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 7 முதல் 8 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் சுயஉதவிக்குழுக்களை வைத்து , சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று பைகளை தைக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக என்று தெரிவித்தார்.
பரசுராமன்.ப








