குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் சார்பில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் (84) பெயர் பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை களமிறக்க முனைப்பு காட்டி வருகிறது.
முதலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்க முடிவு செய்யப்பட்டது. எனினும், அதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து, கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனினும், அவரும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். தன்னை விட அதிக திறமை கொண்டவர்களை முன்னிறுத்துங்கள் என்று அவர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை முன்வைத்தார்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்க திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த எதிர்க்கட்சிகள் விரும்பியது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்தியதை அடுத்து, எதிர்க்கட்சிகளும் தங்களது விருப்பத்தை மறுபரிசீலனை செய்தன.
யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?
பீகார் மாநிலம், பாட்னாவில் 1937ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி பிறந்தார்.
இவருக்கு நிலிமா சின்ஹா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அரசியல் அறிவியலில் 1958 முதுகலை பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக்கழகத்தில் 1962ம் ஆண்டு வரை அரசியல் அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.
பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை தனது பதவிக் காலத்தில் வகித்திருக்கிறார். பின்னர், ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்தபோது, மத்திய நிதி அமைச்சராகவும், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்தார்.

திரிணமூல் கட்சியிலிருந்து விலகல்
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் இன்று விலகுவதாக அறிவித்தார். அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறி அக்கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசுத் தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.
அடுத்த குடியரசுத் தலைவராக யாருக்கு வாய்ப்புள்ளது என்ற விவாதங்களும் கூட சமீப நாட்களாக மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29 கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை ஜூன் 30ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூலை 2ம் தேதி கடைசி நாள் ஆகும்.
-மணிகண்டன்