அதிமுக ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சையில் சென்னை கிரின்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார்.
வரும் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் ஓ.பி.எஸ்க்கு 11 மாவட்ட செயலாளர்களும், இ.பி.எஸ்க்கு 64 மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கிரின்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம் தன்னைத்தானே சுற்றி வந்தார். பாரபட்சம் காட்டினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன் இயக்கத்தை சுற்றிவந்ததார். எனவே அவரை ஜெயலலிதாவின் செயல்வடிவமாக பார்க்கிறோம். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அம்மா பேரவை ஆதரவு தெரிவிக்கிறது.” என்று கூறினார்.









