நூல் விலை உயர்வு- 2வது நாளாக தொடரும் போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்துவிசைத்தறி உரிமையாளர்கள் 2வது நாளாக அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் அருகே உள்ள ஆவரம்பட்டி, சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி, மலையடிப்பட்டி உள்ளிட்ட…

நூல் விலை உயர்வை கண்டித்துவிசைத்தறி உரிமையாளர்கள் 2வது நாளாக அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் அருகே உள்ள ஆவரம்பட்டி,
சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி, மலையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்
நூல் சேலை உற்பத்தி செய்யும் சுமார் 3 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ. 48 லட்சம் மதிப்புள்ள நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள்
தினமும் ரூ. 3 லட்சம் வரை வரை சம்பளம் பெற்று வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள்
குற்றம் சாட்டினர். இதன் காரணமாக தற்போது தொழில் நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், அதிக விலை கொடுத்து நூல் வாங்கி சேலை உற்பத்தி செய்தாலும், அதை கூடுதல் விலைக்கு விற்க முடியவில்லை எனவும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே தங்களின் நிலை குறித்து அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக இன்று 2 வது
நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, சிறு விசைத்தறி
உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாள போராட்டத்திற்கு பிறகும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.