டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், எனவே அவர்கள் போலீசார் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே இன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் மல்யுத்த வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஏறுமுகத்தில் தங்கம் விலை – மூன்றே நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “மல்யுத்த வீரர்கள் முன்வைக்கும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உச்சநீதிமன்றமும் அதன் தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லி போலீசார் நேர்மையான விசாரணையை நடத்தி வருகின்றனர். போராடி வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே அவர்கள் போலீசார் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.








