பழனியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆவின்பால் குளிரூட்டும் நிலையம் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆவின் பால் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையம் பழனி-கொடைக்கானல் சாலையில் 1976-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆவின் பால் குளிரூட்டும் ஆலை 50 வருடங்களாக செயல்பட்டு வந்தது. ஒரு நாளுக்கு 15 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு, பால் குளிரூட்டப்பட்டு பின் பழனியிலிருந்து, சென்னைக்கு அனுப்பப்பட்டு அவற்றை பதப்படுத்தி பாக்கெட்டில் அடைத்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி ஆவின் குளிரூட்டும் நிலையத்திலுள்ள PMC எனப்படும் குளிரூட்டும் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக கூறி தற்காலிகமாக ஆவின் நிலைய செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ஆலை மூடப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர எவ்வித முயற்சியும் நடைபெறவில்லை. இதனால் பழனி அருகே உள்ள பூலாம்பட்டி, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்துார், கள்ளிமந்தையம் அருகேயுள்ள கூட்டக்காரன்புதுார் ஆகிய இடங்களில் உள்ள பால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆலைக்கு கொண்டு சென்று குளிரூட்டுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பழனியிலுள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளதால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
—அனகா காளமேகன்







