உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 4 இந்திய வீராங்கனைகளும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பல்வேறு சுற்றுகளில் அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், லவ்லினா போர்கோஹைன், சவீட்டி பூரா, நிது கங்காஸ் மற்றும் நிகத் ஜரீன் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனை லுட்சைகானியை இந்தியாவின் நிது கங்காஸ் எதிர்கொண்டார். இதில் அதிரடியாக விளையாடிய நிது, 5-0 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். அதேபோல் நடைபெற்ற மற்றொரு போட்டியில், சீன வீராங்கனை வாங் லீனாவை எதிர்கொண்ட சவீட்டி பூரா 4-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
மற்றொரு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், வியட்நாமின் நுயென் தை டம்மை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக நிகத் ஜரீன் தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு துருக்கியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 4 இந்திய வீராங்கனைகளில் மூன்று பேர் தங்கம் வென்ற நிலையில், மீதம் இருக்கும் லவ்லினா போர்கோஹைனும் தங்கம் வெல்வாரா என குத்துச்சண்டை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அதன்படி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கரை எதிர்கொண்ட லவ்லினா அதிரடியாக விளையாடி 5 -2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டுள்ளார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 4 இந்திய வீராங்கனைகளும் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.