நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது எனவும் சர்வதேச கொள்கைகளை நெறிப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ’துக்ளக்’ இதழின்…

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது எனவும் சர்வதேச கொள்கைகளை நெறிப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

’துக்ளக்’ இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இந்தவிழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: வடக்கு எல்லையில் சீனா மிகப் பெரிய படைகளுடன் வந்து எல்லையை மாற்றும் திட்டத்தில் இருந்தது. ஒப்பந்தங்களை மீறியது. ஆனால், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும் நமது எதிர்ப்பு வலிமையானதாக இருந்தது. கடுமையான காலநிலை அப்பகுதியில் இருந்தாலும் நமது படைகள் தொடர்ச்சியாக எல்லையில் நிறுத்தப்பட்டன. இந்தியாவை  யாரும் கட்டாயப்படுத்த முடியாது. பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா எந்த சமரசமும் செய்துகொள்ளாது.

சர்வதேச அளவில் இந்தியா மிகவும் பொறுப்பான நாடாக இருந்து வருகிறது. இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான நாடாக திகழ்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. சர்வதேச அளவில் கொள்கைகளை நெறிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது.

இந்தியாவில் இருந்து 3.2 கோடி மக்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உதாரணமாக, உக்ரைன் நாட்டில் ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் இந்தியர்களை அங்கிருந்து மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தன.இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.