துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் : 3பேர் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டோர் காயம்

துருக்கியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே…

துருக்கியில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையும் படியுங்கள் : துருக்கி, சிரியாவில் 45 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர் உயிருடனும் மீட்கப்பட்டு வருகின்றனர். சனிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் நெருங்கியுள்ளது. இதில், துருக்கியில் 41,156 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டினரின் மீட்பு குழுக்கள் நடத்திய மீட்புப் பணிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு மீட்பு குழுவினர் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.

இதனையும் படியுங்கள்: துருக்கி நிலநடுக்கம் : பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்பு

இந்த நிலையில் இரு நாட்டு எல்லைப் பகுதியான தெற்கு ஹதாய் மாகாணத்தில்  நேற்றிரவு  10.54 மணி அளவில் அடுத்தடுத்துமிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5.8 அலகுகளாக பதிவாகியிருந்தன. இதில், துருக்கி அந்தாக்யா மாவட்டத்தில் ஒருவர், டெஃப்னே மாவட்டத்தில் ஒருவர் மற்றும் சமாண்டக் மாவட்டத்தில் ஒருவர் என மூன்று  பேர் உயிரிழந்ததாகவும், 213 பேர் காயமடைந்ததாகவும் துருக்கியின்  உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உலகமே அதிர்ச்சியடைந்து சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கிய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.