மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்து வரும் நிலையில் இதன் பின்னணியில் உள்ள சாதி, மத ஒடுக்குமுறை குறித்த ஆவணப்படம் ஒன்று அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது.
இதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சார்ந்த மாணவர்களும் பங்கேற்றுள்னர். இந்த நிலையில் மாணவர் சங்க அலுவலகத்தில் ஆவணப்பட திரையிட முயன்றபோது அதற்கு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் படங்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் மீண்டும் ஆவணப்படம் திரையிட, அதற்காக அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜியின் படத்தை இடதுசாரி உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் அகற்றினர்.
அப்போது மீண்டும் அங்கே வந்த ஏபிவிபி அமைப்பினரிடம் தமிழக மாணவர்கள் பெரியார் படம் சேதப்படுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அப்போது ஏபிவிபி அமைப்பினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் நாசருக்கு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடாமல் ஏபிவிபி-யினர் தடுத்து தாக்கியதாகவும் குற்றச்சாட்டு தமிழக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
அண்மைச் செய்தி: ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ் விவகாரம்- முதலமைச்சர் பொம்மையிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி
மேலும் ஏற்கனவே பிரதமர் குறித்த பி.பி.சி ஆவணப்படம் திரையிட முற்றபட்டபோது இதுபோன்ற தாக்குதலை ஏபிவிபி அமைப்பினர் நடத்தியதாகவும், அது போன்ற தாக்குதல் தொடர்பாக துணைவேந்தரிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும், ஏபிவி்பி அமைப்பினரின் இதுபோன்ற தாக்குதல் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இருக்க ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ஏபிவிபி அமைப்பினர், சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்தை இடதுசாரி மாணவர்கள் அரங்கில் இருந்து வெளியே தூக்கி இருந்ததாகவும், அதற்கு போடப்பட்டிருந்த மாலையை குப்பைத் தொட்டியில் வீசியதால்தான் பிரச்சனை எழுந்தது என்றும், அப்போது இடதுசாரி மாணவர்கள் தன் முதலில் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







