உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது.
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். ஒரு மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு 2100 கலோரி உணவு உட்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானது. ஆனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், தற்போது வரை வறுமை நிலையால் பசியால் பலரும் வாடும் நிலை இருந்து கொண்டு தான் உள்ளது. இதற்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் கூட பசி பட்டினியால் வாட கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், உலக பட்டினி தினத்தை அனுசரிக்க உள்ளதாக கடந்த 25ஆம் தேதி அன்று அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். அதில் தளபதி விஜய்யின் ஆணைக்கிணங்க உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி பிணியை போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, வருகின்ற 28 அன்று பகல் 11 மணி அளவில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிககளிலும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு வேலை மதிய உணவு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில், உலக பட்டினி தினமான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, ஏழை மக்களின் பசியை போக்க தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த குரோம்பேட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஏழை மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு 500 பேருக்கு உணவுகளை வழங்கி பசியாற்றினார். இதே போன்று தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடஙகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதிய உணவினை வழங்கினர்.
இதேபோல், திருச்சியில் இபி ரோடு, அண்ணா நகர் பகுதியில், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து, ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கி பசியாற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. இதே போல் கேரளா மற்றும் புதுவையிலும் இன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு உணவுகளை வழங்கினர். மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் பலருக்கு ஒரு வேலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் உணவினை வாங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த இயக்கத்தின் மாவட்ட தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான பர்வேஸ் உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, மதிய உணவாக பிரியாணி, தண்ணீர் பாட்டில், அதனுடன் சேர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளையும் வழங்கினார். இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு
மதிய உணவை வழங்கி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியை போக்கும் விழிப்புணர்வை, சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இந்த நலப் பணியை செயல்படுத்துகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா