அரசியல் கட்சி தொடக்கம் குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என விஜய் மக்கள் இயக்க தென் மண்டல பொறுப்பாளர் பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.
உலக பட்டினி தினமான இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விஜய்
ரசிகர்கள் ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என நடிகர் விஜய் அறிவித்தார்.
இதனை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த குரோம்பேட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஏழை மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு 500 பேருக்கு உணவுகளை வழங்கி பசியாற்றினார். இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிக்கன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க தென் மண்டல பொறுப்பாளர் பில்லா ஜெகன் தலைமையில் ஏராளமோனோர்க்கு உணவு வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்
உணவில்லாமல் யாருமே இருக்கக்கூடாது என்பதற்காகவே ஒருவேளை உணவளிக்கும்
திட்டத்தை தளபதி விஜய் தொடங்கியிருக்கிறார் என்றார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் அரசியலை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றும் கட்சி தொடக்கம் குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார்.
மேலும் மாவட்டம் வாரியாக கிளைக்கழகம் , பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது என்றும் அரசியல் கட்சி தொடங்கியவுடன் பொறுப்பாளர்கள் குறித்து தளபதி விஜய் அறிவிப்பு வெளியிடுவார் என்றார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் விரைவில் அறிவிப்பார்
என தெரிவித்த அவர் நாடாளுமன்றத் தேர்தலில் இலக்கு குறித்து இதுவரை அறிவிப்பு ஏதும்
இல்லை என்றார். அத்துடன் மதுரையில் மாநாடு நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்ற அவர் நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியில் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் இருக்கக்கூடாது என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.







