ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட ஆயிரத்து 105 இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 உயர்பதவிகளுக்கான தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இது முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் என 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களைவைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அந்தவகையில், நடப்பு ஆண்டுக்கான குடிமைப் பணிகளில் அடங்கிய 1,105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியானது. தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் 7 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டன. காலை பொது அறிவு தேர்வும், மாலை திறனறி தேர்வும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேர்வர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
தேர்வு எழுதுவதற்கு முன்பாக, நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வாளர் சிப்பிக்கா யூபிஎஸ்சி தேர்விற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சென்னையில் தங்கி படித்து வருகிறேன். இதற்கு முன்பு 2 முறை தேர்வு எழுதி உள்ளேன். கண்டிப்பாக இந்த முறை தேர்வில் வெற்றி பெறுவேன். முதல்நிலை தேர்வு ஹிந்தியில் வைப்பதால், ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகமாக வெற்றி பெறுகிறார்கள். தமிழில் தேர்வு நடத்தினால் தமிழகத்திலிருந்து ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாவார்கள் என தெரிவித்தார்.
அண்மையில் 2022ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியானது. அதில் 933 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா