உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான விளையாட்டை வெளிபடுத்தாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
அந்த அணியின் வீரர் நஜ்முல் ஹூசைன் நிலைத்து விளையாடி 54 ரன்கள் எடுத்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் வரை அவர்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் குறைவான ரன்களை எடுத்து கொடுத்தாலும், அந்த அணி 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
அதேநேரத்தில் மற்றொரு போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும். பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் மோதும். எனவே, இனி வரும் போட்டிகள் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
-இரா.நம்பிராஜன்








