தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மின் தேவை ஒரு நாளைக்கு 17,000 மெகாவாட் என்ற சராசாரியில் இருக்கிறது. தேவைப்படும் மின்சாரத்தில் 25 விழுக்காடு மட்டுமே மின்வாரியம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் வாரியத்தின் சொந்த நிறுவு திறனை 32,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடியும். ஆனால் 7125 மெகாவாட் மட்டுமே மின்வாரியத்தின் சொந்த நிறுவு திறனாக உள்ளது. அடுத்த 10 ஆண்டில் 65,000 மெகாவாட் அளவு தமிழகத்தில் மின் தேவை உயரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மின் வாரிய சொந்த உற்பத்தியை 50 விழுக்காடாக அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு தேவைப்படும் மின் தேவையை அரசும் , மின்வாரியமுமே நிறைவேற்ற முடியும்.
எனவே, 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மின் உற்பத்தியை அதிகரித்தால் மின் விநியோக கட்டமைப்பையும் அதிகரிக்க வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு காற்றாலை மூலம் உற்பத்தியான மின்சாரத்தில் 100 விழுக்காடு மின்சாரத்தை வீணடிக்காமல் பயன்படுத்தப்பட்டது. 105 மெகாவாட் அளவிற்கு சூரிய , காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கால விரயமின்றி அனைவருக்கும் உடனுக்குடன் மின் வாரியம் மூலம் ஒப்புதல் வழங்கப்படுகிறது. 2030க்குள் உற்பத்தி செய்யப்படும் 20,000 மெகாவாட் மின்சாரத்தில் 6,000 மெகாவாட் மின்சாரம் சொந்த உற்பத்தி நிறுவு திறன் மூலம் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 316 துணை மின் நிலையங்களுக்கு டெண்டர் விடும் பணிகள் நடக்கிறது. மக்களுக்கு தேவையான மின்சாரத்தை அரசே முழுவதுமாக உற்பத்தி செய்வதற்கான காலமும் , நிதியும் போதாது. எனவே, தனியாருடன் சேர்ந்து பணியாற்றினால் தான் தமிழக மக்களுக்கனா மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தனியார் நிறுவனங்கள் மின் வாரியத்துடன் இணைந்து பயணிக்க முழு ஒத்துழைப்பும் மின் வாரியம் தரும். தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 2030 வரையான காலகட்டத்திற்கு 17 விழுக்காடு இருக்கிறது. ஆனால், 43 விழுக்காடு இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
அரசின் சேவை விரைந்து கிடைக்க தொழில் முனைவோர் அனைவரும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். தமிழகத்தில் தற்போது மூன்றரை கோடி மின் நுகர்வோர் இருக்கின்றனர் , ஆண்டுக்கு 10 லட்சம் மின் நுகர்வோர் அதிகரிப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.







