சென்னையில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏன்?-அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னையில் சில பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை…

சென்னையில் சில பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை மண்டலத்தை சேர்ந்த 33 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பூங்கா நகர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் நடைபெறும் பொது விருந்தில் கலந்து கொண்டார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

சமபந்தி நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று உணவருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அகவிலைப்படி  உயர்வு என்ற மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ளார். மின்வாரியத்தில் 1.80 லட்சம் பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இதனால் பயன் பெறுவார்கள்.

கோவையில் வரும் 24 ஆம் தேதி 82,000 மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். அன்று மாலை பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் பல்லாயிரம் பேர் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைகின்றனர்.

சென்னையில் மின்சார துறை சார்பில் இரவு நேரங்களில் பணி மேற்கொள்ளப்படுவதால் சில சமயங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.