கீழடியில் உலக சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் இதுவரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த வருடம் தொடங்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இவர்களுடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி அகழாய்வில் மிக அரிதான பொருட்களும், புதிய கற்காலத்தில் தொடங்கி, கீழடி நாகரீகம் வரை உள்ள வரலாற்று பொருட்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், கீழடியில் உலக சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.







