ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைபிடிக்கப்படுவதைப் போல, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும், இரண்டு ஆண்டுகளுக்கான அரியர் தேர்வுகளை, தேர்வுக்கட்டணம் செலுத்தி எழுதலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்த அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 விருப்ப பாடங்கள் இருக்கும் நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 9-வது விருப்ப பாடமாக தமிழ் இடம்பெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







