தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது : பாஜக பெண் தலைவர் ஆவேசம்

குஜராத்தில் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா…

குஜராத்தில் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயதான ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார். திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. இவருடைய திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் இவர் அழைத்துள்ளார்.

இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் இந்நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெறவுள்ளது. மேலும், திருமண நிகழ்வில் ஒன்றான மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஷாமா ஹனிமூனுக்கு கோவாவுக்கு செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா கூறுகையில், ஷாமா பிந்து சோலோகேமி முறையில் கோயிலில் திருமணம் செய்துகொள்ள விடமாட்டோம். இத்திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது. இந்து கலாசாரத்தில் பெண் பெண்ணையும், ஆண் ஆணையும் திருமணம் செய்துகொள்ளும் முறை உள்ளதாக அப்பெண் கூறுகிறார். ஷாமா ஒரு மனநிலை சரியில்லாதவர். அவர் சோலோகேமி முறையில் திருமணம் செய்துகொள்ள எந்த கோயிலிலும் அனுமதிக்கக் கூடாது. இது இந்து மக்கள் தொகையைக் குறைத்துவிடும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.