தமிழ்நாட்டில் மகளிா் உரிமைத் தொகையைப் பெறுவற்காக, இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள், நியாயவிலைக் கடைகளுக்கேச் சென்று பெற்றுக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக 1 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் 30 சதவீத விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
நியாய விலைக் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை எளிதாக விநியோகம் செய்து விட்டனர். ஆனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளதால் இங்கு விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்குவது என்பது ஊழியர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக உணவுத் துறை ஊழியா்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் அதிகபட்சமாக ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 800 குடும்ப அட்டைகள் உள்ளன. அவா்களில் பாதியளவு அட்டைதாரா்களே விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனா். தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகள் தங்களுக்குப் பொருந்தாது என்பதை அறிந்து, பாதிக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களைப் பெறவில்லை. மற்றவா்கள் விண்ணப்பப் படிவங்களுடன் டோக்கன்களைப் பெற்றுள்ளனா். படிவங்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள், கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்து விட்டதாக கூறினர்.
இதன் பிறகு 2-ம் கட்டத்துக்கான விண்ணப்பம் தேவைப்பட்டால் வீடு வீடாக விநியோகிக்கப்படும். ஒவ்வொரு முகாமிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாத குடும்ப தலைவிகளுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நிறைவடைந்தாலும், படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள் கவலை கொள்ள வேண்டாம் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும் இது குறித்து அவர்கள் பேசுகையில், முதல் கட்ட முகாமுக்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அதனைப் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, குடும்ப அட்டைதாரா்கள் எந்தக் கடையில் பொருள்களை வாங்குகிறாா்களோ, அவா்கள் அங்கே சென்று படிவத்தைப் பெறலாம் என்று தெரிவித்தனா்.
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை 91.36 லட்சம் விண்ணப்பங்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அவற்றில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நியாய விலைக் கடை பணியாளா்களால் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டவை. மேலும், தேவைப்படும் குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







