ரூ.4,669.99 கோடிக்கு ஏலம் போன மகளிர் ஐபிஎல் அணிகள்

மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தொடங்கி  மொத்தம் உள்ள ஐந்து அணிகள் ரூபாய் 4,669.99 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாத முதல்…

மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் தொடங்கி  மொத்தம் உள்ள ஐந்து அணிகள் ரூபாய் 4,669.99 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இந்த ஆண்டு மார்ச் மாத முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது. எனவே இந்த முதல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான ஏலம் இன்று மதியம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதானி கேபிடல்ஸ், ஹால்திராம்ஸ், அப்போலோ பைப்ஸ், ஶ்ரீராம் குரூப்ஸ் போன்ற 17 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று இருந்தன.

குறிப்பாக இந்த 17 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் ஆவர். சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.

மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு நிறுவனமும் கடந்த மார்ச் மாத நிதி ஆண்டின் இறுதியில் குறைந்தபட்சம் 1000 கோடி சொத்து மதிப்பிலான நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற பிசிசிஐ- இன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 17 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று இருந்தன.

இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஏலம் 3 மணியளவில் முடிந்த நிலையில், இந்த முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கு உண்டான ஏலம் ரூபாய் 4,669.99 கோடிக்கு 5 நிறுவனங்கள் வாங்கியுள்ளன.

குறிப்பாக அதானி ஸ்போர்ட்ஸ் ஸ்லிங் நிறுவனம் அகமதாபாத் அணியை ரூபாய் 1289 கோடிக்கும், இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மும்பை அணியை ரூபாய் 912.99 கோடிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெங்களூரு அணியை ரூபாய் 901 கோடிக்கும், JSW GMR கிரிக்கெட் நிறுவனம் டெல்லி அணியை ரூபாய் 810 கோடிக்கும், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லக்னோ அணியை ரூபாய் 757 கோடிக்கும் வாங்கியுள்ளன.

முன்னதாக மகளிருக்கான இந்த பிரத்தியேக ஐபிஎல் தொடர் WOMENS PREMIER LEAGUE என்று அழைக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் சா டிவிட்டர் மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த முதல் சீசனில் மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

கடந்த மாதம் ஒலிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தில், மகளிர் ஐபிஎல் தொடரின் ஒலிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் 951 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.