தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். இது வெறும் டெபிட் கார்டு இல்லை. பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு.
பெண்களின் முன்னேற்றம் மூன்று வழியில் தடுக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய மூன்றின் வழியாக அவர்களின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது என பெரியார் தெரிவித்துள்ளார். சிறு வயதில் தந்தையையும், திருமணம் ஆன பின்பு கணவரையும், வயதான பின் மகனையும் பெண்கள் நம்பி இருந்தனர்.
திமுகவின் பிரச்சாரத்தால் விதவை கோலத்தில் இன்று பெண்கள் இல்லை. தந்தை சொத்தில் மகளுக்கும் சம உரிமை உள்ளது என்ற சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை வழங்கியுள்ளார். பணிக்கு செல்லும் பெண்களின் சிரமத்தை குறைக்க, பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வழங்கி உள்ளார். இப்போது மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள் : ”இந்த நாளுக்காக காத்திருந்தேன்…!” – வைரலாகும் ராகவ் – பரினீதி Wedding க்ளிக்ஸ்!!
பெண்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பெண்கள் அரசியல் பேச வேண்டும். செல்போனில் வரும் செய்திகளின் உண்மையை ஆராய வேண்டும். பெண்கள் படிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.







