பரினீதி சோப்ரா பகிர்ந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பரினீதி சோப்ரா. 2011-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான பரினீதி சோப்ரா, 12 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் நடைபெற்றது. அன்று தங்களது காதலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து நேற்று உதய்பூர் அரண்மனையில் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட சில பிரபலங்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர்.
திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பரினீதி சோப்ரா, “காலை உணவு உண்ணும்போது இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் உரையாடலிலிருந்தே, எங்கள் இருவரது மனமும் உணர்ந்துகொண்டது. இந்த நாளுக்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். ஒரு வழியாக கணவன் – மனைவி பந்தத்தில் இணைந்ததில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். அவர் இல்லாமல் நானும், நான் இல்லாமல் அவரும் வாழ்ந்திருக்க முடியாது. எங்களின் முடிவற்ற பந்தம் இப்போது தொடங்குகிறது…” என்று பதிவிட்டுள்ளார்.







