விமானத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பெண் பயணி பல மணி நேரம் கழிவறையிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்டார்.
அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் மரிசா. இவர் சிகாகோ மாகாணத்தின் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் சிகாகோவில் இருந்து சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலா செல்ல பயணப்பட்டார். இதற்காக அவர், விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பாக 2 முறை பிசிஆர் பரிசோதனை மற்றும் 5 முறை ரேபிட் பரிசோதனை செய்துள்ளார். இந்த அனைத்து சோதனையிலும் மரிசாவுக்கு கொரோனா இல்லை என்றே முடிவுகள் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர் பூஸ்டர் டோஸ் உள்பட 3 கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பயணத்தின் போது மரிசாவுக்கு திடீரென தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் ஏற்பட்டது. இதனால், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என சந்தேகமடைந்த அவர், விமானத்தில் உள்ள கழிவறைக்குச் சென்று தன்னிடம் இருந்த ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், விமானத்தில் உள்ள பெண் பணியாளரை அழைத்து தனக்கு கொரோனா இருப்பதாகவும், கழிவறையிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அவரும் மற்ற பயணிகள் யாரும் அந்த கழிவறையை பயன்படுத்தாத வகையில் அதைப் பூட்டி வைத்தார். விமானம் தொடர்ந்து வேறு எங்கும் தரையிரங்காததால் மரிசா தொடர்ந்து 3 மணி நேரம் கழிவறையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.
அதன்பின் ஐஸ்லாந்தில் விமானம் தரையிறங்கியதையடுத்து கழிவறையில் இருந்து வெளியேறிய அவரை, மருத்துவக்குழுவினர் சோதனை செய்து, கொரோனா இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, மரிசா ஐஸ்லாந்தில் உள்ள ஒரு விடுதியில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். 10 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்ததில், கொரோனா இல்லை என முடிவானது. இதையடுத்து நேற்று சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் தனது பயணத்தை அவர் மேற்கொண்டார். மேலும், மரிசா தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட செய்தி மக்களிடையே பரவியதைத்தொடர்ந்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.