பட்டியல் இனப் பெண் சமைப்பதை சாப்பிட, மாணவர்கள் மறுத்ததை அடுத்து, அந்த பெண் வேலையை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள சுகிந்தங்க் என்ற ஊரில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களுக்கான சத்துணவு சமைப்பதற்காக, பட்டியலினத்தைச் சேர்ந்த சுனிதா தேவி என்ற பெண் கடந்த 13 ஆம் தேதி நியமிக்கப் பட்டார்.
முதல் நாள் அவர் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்ட மாணவர்களில் சிலர், மறுநாள் பள்ளியில் சாப்பிடவில்லை. பட்டியலினப் பெண் சமைப்பதை சாப்பிட எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் அந்த வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி சம்பாவத் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புரோகித்திடம் விசாரித்தபோது, அந்தப் பெண் நியமனத்தில், பள்ளி நிர்வாகம் சரியான விதிமுறைகளைப் பின்பற்ற வில்லை என்று அறிந்தோம். இதனால் அவரை நீக்கியுள்ளோம் . இப்போது புதியவர் நியமிக்கப்படும் வரை வேறொரு பெண் சமைத்து வருகிறார். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ’ என்று தெரிவித்தார்.








