பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, சீர்வரிசை பொருட்களை திருடிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அறமத்தாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவருக்கும் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவர் மணிகண்டன் பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு வைஷ்ணவியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது .
இந்நிலையில், வீட்டில் இருந்த சீர்வரிசைப் பொருள்களை கணவர் மணிகண்டன்
எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் மனு மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், தனது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டும், சீர்வரிசை பொருட்களை
மீட்டுக் கொடுக்க கோரியும், கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
வைஷ்ணவி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.







