’ஜாக்கெட் பிரச்னை…’டெய்லர் மனைவி உயிரிழப்பு

ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி  உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அம்பர்பேட்டை அருகில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா. இவர்…

ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி  உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத் அம்பர்பேட்டை அருகில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா. இவர் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. டெய்லரான ஸ்ரீனிவாசா, பிளவுஸ் துணி, சேலை ஆகியவற்றை வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். விஜயலட்சுமி தனக்கு ஒரு ஜாக்கெட் தைத்துத் தரும்படி கேட்டார். தைத்துக் கொடுத்தார் ஸ்ரீனிவாசா. அது சரியாகத் தைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் விஜயலட்சுமி, சரியாக மீண்டும் தைத்துத் தரும்படி கேட்டார்.

தையலைப் பிரித்த ஸ்ரீனிவாசா, அவரிடமே ஜாக்கெட்டை கொடுத்து ’உனக்கு எப்படி வேணுமோ, அப்படியே தச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் வழக்கம் போல துணிகள் விற்க சென்றுவிட்டார் ஸ்ரீனிவாசா. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பின. பெட்ரூம் கதவு பூட்டி இருந்ததால், நீண்ட நேரமாக தட்டினர். திறக்கவில்லை என்பதால், ஸ்ரீனிவாசாவுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர், கதவை உடைத்து திறந்தார். உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் விஜயலட்சுமி பிணமாக கிடந்தார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.